தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், புகழூர் ரெயில்வே கேட்டில் இருந்து பேச்சிப்பாறை செல்வதற்கு ரெயில்வே பாதை அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த வழியாக பேச்சிப்பாரை, கவுண்டன் புதூர், செல்வநகர், சேமங்கி, முத்தனூர், நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எலும்புகூடான மின்கம்பம்

கரூர் மாவட்டம், புகழூர் ரெயில்வே கேட்டில் இருந்து காகித ஆலை குடியிருப்பு பகுதிக்கு பின்புறம் செல்லும் தார் சாலை ஓரத்தில் மின் கம்பம் நடப்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின்கம்பத்திலிருந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கீழே விழுந்து தற்போது எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. எந்த நேரத்திலும் மின் மின்கம்பம் முறிந்து தார் சாலையில் விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தையொட்டி உயர் அழுத்த மின்சாரம் செல்கிறது. எனவே இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் கடைகளில் இருந்து வாங்கி வரும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வந்து பயன்படுத்திவிட்டு அந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்பகுதியில் உள்ள தார் சாலை ஓரத்தில் பொதுமக்கள் கொட்டி வருகின்றனர். இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

கரூர்-பாளையம் சாலையில் சின்னமநாயக்கன்பாட்டி பிரிவு பஸ் நிறுத்தம் உள்ளது. சின்னமநாயக்கன்பட்டி, பெரியார் நகர், மாரியம்மன் நகர், கற்பகாநகர், செல்வம்நகர், அண்ணாநகர், ஜோதி நகர், காத்தாளபட்டி புதூர், செல்லிபாளையம், கொங்கு நகர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலை நிமித்தமாக கரூர் மற்றும் பாளையம் பகுதிகளுக்கு செல்ல இந்த பஸ் நிறுத்த பகுதிக்கு வந்து பஸ் ஏறியும், இறங்கியும் செல்கின்றனர். அப்படி பஸ் ஏற வரும் பயணிகளும், பொதுமக்களும் காத்திருந்து பஸ் ஏற வேண்டிய நிலையில் வெயில் மற்றும் மழை போன்றவற்றில் தற்காத்துக்கொள்ள நிழல் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இங்கு பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பூங்கா திறக்கப்படுமா?

கரூர் வெண்ணைமலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா தற்போது பூட்டி கிடக்கிறது. எனவே பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story