தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள செம்பரை, கோமாகுடி, ஆலங்குடி, கல்விக்குடி, திண்ணியம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கல்லக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட தூரத்தில் இருந்து மின்சாரம் வருவதால் அடிக்கடி மின்தடையும், குறைவான மின்சாரமே மேற்கண்ட பகுதிக்கு கிடைக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, லால்குடி பகுதியில் ஒரு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்

திருச்சி மாநகரின் அனைத்து தெருக்களிலும், வீதிகளிலும் தெருநாய்கள் பல்கி பெருகி மக்களுக்கு பல தொல்லைகளை கொடுத்து வருகின்றன. இவை இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று அச்சப்படுத்துவதினால் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். சிறுவர், சிறுமிகள் வெளியே விளையாடவே அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு

திருச்சி மாநகராட்சி ராஜமாணிக்கம் பிள்ளை நகரில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். மாநகராட்சியால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஓலையூர் பிரதான சாலையில் இருந்து ராஜமாணிக்கம் பிள்ளை நகரின் நடுவில் உள்ள ரோடு வரை மாநகராட்சியால் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. ஆனால் ஓலையூர் சாலையின் மேல் புரத்தில் உள்ள பிரதான குழாயில் இருந்து இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை இந்திரா நகர் பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குழம்பு போல் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலைகளில் தேங்கும் கழிவுநீர்

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை வசந்த் நகர் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story