'தினத்தந்தி' செய்தி எதிரொலி:3 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதிப்பட்ட பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி காரணமாக 3 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதிப்பட்ட பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கிணத்துக்கடவு
'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக 3 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதிப்பட்ட பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குடிநீரின்றி அவதி
கிணத்துக்கடவு அருகே உள்ள சொலவம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சொலவம்பாளையம், குமாரபாளையம், இம்மிடிபாளையம், சிக்கலாம் பாளையம், கருப்பம்பாளையம், காமராஜர் நகர், உதயம் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதியில் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதிகளுக்கு ஆழியாறு ஆற்றில் இருந்து குழாய் மூலம் சிங்கையன் புதூர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி பகுதியில் குமாரபாளையம் கடைசி பகுதி என்பதால் இந்த பகுதிக்கு ஆழியாறு குடிநீர் கிடைப்பதில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் சிக்கல் நிலவி வந்தது.
ஆனாலும் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பிரச்சினை சமாளிக்க கூடுதலாக ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வழங்கி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக குமாரபாளையத்திற்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் அந்தப் பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
குடிநீர் வழங்க நடவடிக்கை
இதுகுறித்த செய்தி கடந்த 27-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் குமாரபாளையத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல குழாய்கள் ஆய்வு செய்து விரைந்து குடி தண்ணீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி சொலவம்பாளையம், குமாரபாளையம் பகுதியில் குடிநீர் குழாய்களை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து குமாரபாளையத்திற்கு குடிநீர் வழங்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகளை நேற்று கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிக்கந்தர் பாஷா, சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
நன்றி தெரிவித்த பொதுமக்கள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- எங்களது ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் குடிநீர் கிடைத்து 3 ஆண்டுகள் ஆவது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து எங்களது கிராமத்தில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு குடிநீர் வழங்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும், தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.