'தினத்தந்தி' செய்தி எதிரொலி:ஆழியாறில் படகு சவாரி மீண்டும் தொடக்கம்-கட்டணத்தை குறைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்


தினத்தந்தி செய்தி எதிரொலி:ஆழியாறில் படகு சவாரி மீண்டும் தொடக்கம்-கட்டணத்தை குறைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 March 2023 12:30 AM IST (Updated: 7 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து ஆழியாறில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.

கோயம்புத்தூர்

ஆழியாறு

தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து ஆழியாறில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.

படகு சவாரி

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அணை, பூங்காவை சுற்றி பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அணையில் படகு சவாரி நடத்தப்பட்டது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் படகு சவாரியை தொடங்க பேரூராட்சி நிர்வாகம் மூலம் புதிதாக படகு தயார் செய்யப்பட்டது.

மேலும் அணையில் பேரூராட்சி அதிகாரிகள் படகை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினார்கள். இதை தொடர்ந்து மீண்டும் படகு சவாரி தொடங்க இருந்த நிலையில் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகைக்கு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் ஆழியாறில் இருந்து படகை சிறுமுகைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதன்பிறகு அந்த படகு திரும்பி வரவில்லை. இதன் காரணமாக ஆழியாறில் படகு சவாரி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து தற்போது அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்கி உள்ளது.

கட்டணத்தை குறைக்க வேண்டும்

பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஆழியாறு அணையில் சிறுமுகைக்கு கொண்டு செல்லப்பட்ட படகு திரும்ப வரவழைக்கப்பட்டு படகு சவாரி நடத்தப்படுகிறது. பெரியவர்களுக்கு ரூ.150, 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.100, படகில் 10 பேர் வரை அணையை 15 நிமிடம் சுற்றி பார்க்க ரூ.1500, 18 பேருக்கு ரூ.2700 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் படகு சவாரி நடத்தப்படுகிறது என்றனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ஆழியாறு அணையில் மீண்டும் படகு சவாரி செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் கட்டணம் அதிகமாக உள்ளதால் ஏழை, எளிய, நடுத்த மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே படகு சவாரி கட்டணத்தை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

1 More update

Next Story