திண்டுக்கல்: 15 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த மீன்பிடித் திருவிழா - ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பு


திண்டுக்கல்: 15 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த மீன்பிடித் திருவிழா - ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பு
x

வடமதுரை அருகே 15 ஆண்டுகளுக்கு பின்னர் செக்கான்குளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள சேர்வைகாரன்பட்டியில் செக்கான்குளம் உள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த தொடர்மழையால் இந்த குளத்தில் தண்ணீர் நிறைந்தது. தற்போது கோடை வெயில் காரணமாக தண்ணீர் வற்றி குறைந்ததை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

இதை முன்னிட்டு மதுரைவீரன், கன்னிமார் மற்றும் ஊர் காவல் தெய்வங்களை பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதன்பின்னர் குளக்கரையில் வைத்து சிறப்பு புஜைகள் செய்து, கிடா வெட்டி வழிபாடு செய்து ஊர்நாயக்கர் வேலுச்சாமி வெள்ளை துண்டை வீசி மீன்பிடி திருவிழாவை துவக்கிவைத்தார்.

அப்போது கரைகளில் வலைகளுடன் நின்றிருந்த அனைத்து தரப்பு ஆண்கள் மற்றும் பெண்கள் உற்சாகமாக தண்ணீருக்குள் இறங்கி மீன்களை பிடித்தனர்.

வடமதுரை, அய்யலூர், எரியோடு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாதி மத பேதமின்றி மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டனர்.

இதில் தேளி, விரால், ஜிலேபி, ரோகு, கட்லா உள்ளிட்ட பல வகையான மீன்களை கிடைத்தது. ஊர் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழா இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story