கடலூர் முதுநகர் அருகே மின்னல் தாக்கி டிப்ளமோ என்ஜினீயர் பலி


கடலூர் முதுநகர் அருகே மின்னல் தாக்கி டிப்ளமோ என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:46 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே மின்னல் தாக்கி டிப்ளமோ என்ஜினீயர் உயிரிழந்தார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடலூரில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலை 4 மணியளவில் வானத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் கடலூர் மஞ்சக்குப்பம், கடலூர் முதுநகர் ஆகிய பகுதிகளில் பெய்த பலத்த மழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

என்ஜினீயர்

இந்த நிலையில் மின்னல் தாக்கியதில் என்ஜினீயர் ஒருவர் பலியாகினார். அது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் முதுநகர் அருகே உள்ள சின்னகாரைக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் கண்ணன் (வயது 19). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று மாலை சின்னகாரைக்காடு பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

அப்போது வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை அழைத்து வருவதற்காக கண்ணன் சென்றார்.

அதேபகுதியில் உள்ள வயல்வெளியில் சென்றபோது கண்ணன் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கண்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 பேர் காயம்

இதேபோல் குறிஞ்சிப்பாடி அடுத்த கல்லையங்குப்பத்தை சேர்ந்த சங்கர் மகன் சுதர்சன்(19), பழனிவேல் மகன் கருணாமூர்த்தி(21), தங்கொலிக்குப்பத்தை சோ்ந்த முத்து மகன் வீரமணி(45), இவருடய மனைவி சகுந்தலா(40) ஆகியோரும் மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடலூர் அடுத்த டி.குமராபுரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை என்பவருக்கு சொந்தமான மாடு ஒன்றும் மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தது. இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story