ராஜகோபாலசாமி கோவிலில் இயக்குனர் அட்லி தரிசனம்
ராஜகோபாலசாமி கோவிலில் இயக்குனர் அட்லி தரிசனம் செய்தார்.
கோட்டூர்:-
நடிகர் விஜய் நடித்த பிகில், மெர்சல், தெறி, சாருகான் நடித்த ஜவான், நயன்தாரா நடித்த ராஜா ராணி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அட்லி. இவர் நேற்று தனது மனைவி பிரியா, ஒரு வயது குழந்தை மீனு மற்றும் குடும்பத்தினருடன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'எனது பெற்றோர் திருவாரூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். எனது தாயார் இந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு அடிக்கடி வந்து செல்வார். அதன் அடிப்படையில் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்தேன். ஒரு படம் முடிந்த பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்' என்றார். அடுத்த படம் என்ன? என்பது பற்றி நிருபர்கள் கேட்டபோது, 'இனிமேல் தான் முடிவு எடுக்க வேண்டும்' என்றார். தொடர்ந்து இயக்குனர் அட்லி கூத்தாநல்லூர் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு சென்றார்.