மின்கசிவால் விபரீதம்: ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்தது - ரூ.20 லட்சம் தப்பியதா? போலீஸ் விசாரணை


மின்கசிவால் விபரீதம்: ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்தது - ரூ.20 லட்சம் தப்பியதா? போலீஸ் விசாரணை
x

ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் ஏ.டி.எம். எந்திரம் முற்றிலும் எரிந்து நாசமானது. அதில் இருந்த ரூ.20 லட்சம் தப்பியதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை நெற்குன்றம், பட்டேல் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா மொய்தீன் (வயது 45). இவர், வீட்டின் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் கீழ் தளத்தில் உள்ள 2 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒன்றில் தனியார் வங்கி ஏ.டி.எம், மையமும், மற்றொரு கடையில் தையல் கடையும் செயல்படுகின்றன.

நேற்று முன்தினம் இரவு திடீரென ஏ.டி.எம். மையத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் ஏ.டி.எம். மையம் முழுவதும் தீ பரவியதுடன், ஏ.டி.எம். எந்திரமும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

அருகில் இருந்த தையல் கடை மற்றும் மாடியில் உள்ள வீட்டுக்கும் தீ பரவியது. இதனால் வீட்டில் இருந்த ராஜாமொய்தீன் குடும்பத்தினர் வெப்பம் தாங்காமல் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.

தகவல் அறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏ.டி.எம். மையத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர். எனினும் ஏ.டி.எம். மையம் முற்றிலும் எரிந்து நாசமானது. வீடு மற்றும் தையல் கடையில் லேசான சேதம் ஏற்பட்டது.

இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏ.டி.எம். மையத்தில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்தில் ஏ.டி.எம். எந்திரம் முற்றிலும் எரிந்து நாசமானது. எனினும் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் பெட்டிக்குள் தீப்பிடித்து இருக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. எனவே ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.20 லட்சம் பாதுகாப்பாக உள்ளதா? அல்லது அதுவும் தீயில் எரிந்து நாசமானதா? என்பது மும்பையில் இருந்து அந்த வங்கி ஊழியர்கள் வந்து, தீயில் எரிந்து நாசமான ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து பார்த்தால்தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story