பேரிடர் மேலாண்மை ஒத்திகை
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
பேரிடர் மேலாண்மை
சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடை பெற்றது.
இதை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்து பார்வை யிட்டார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒத்திகையின்போது, மழை வெள்ளகாலத்தில் தண்ணீரில் சிக்கினால் வாகன டியூப், வாழை மர மிதவை, பிளாஸ்டிக் குடம், தண்ணீர் கேன் போன்றவற்றை பயன்படுத்தி தப்பிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
செயல்விளக்கம்
மேலும் தீயணைப்பான் கருவிகள், பெரிய கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?, அதற்கான பிரத்யேக கருவிகள் குறித்து விளக்கப்பட்டது.
இது தவிர கட்டிடத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்புவதை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.
நிலச்சரிவு, புயல், நில நடுக்கம், தீவிபத்து போன்ற பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தகவல் பரிமாற்றம், உயிர் சேதம், பொருள் சேதம் தவிர்ப்பது குறித்தும் விளக்கப்பட்டது.
தீயணைப்பு கருவிகள்
வீடுகளில் சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டால் அணைக்கும் முறை, மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் ஊற்றாமல் தீயணைப்பான் கருவியின் மூலம் தீயை அணைப்பது எப்படி என்று மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தனியார் அமைப்பு சார்பில் அரசு சத்துணவு கூடத்துக்கு 200 தீயணைப்பு கருவிகள் வழங்கப்பட்டது.