பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி
பூம்புகார், திருக்கடையூர் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி
திருவெண்காடு:
பூம்புகார் அருகே வானகிரி கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை சந்தித்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வெள்ள காலத்தில் ஆறு மற்றும் கடலில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு மற்றும் போலீஸ் துறையினர் ஒத்திகை செய்து காட்டினர். இதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இளங்கோவன், தாசில்தார் செந்தில்குமார், பூம்புகார் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் துரைமுருகன், பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருக்கடையூர் அருகே மருதம்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னங்குடி மீனவ கிராமத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் பேரிடர் துறை சூப்பிரண்டு கோவிந்தராஜ் தலைமையில், தீயணைப்புத் துறையினர் பொது மக்களுக்கு பேரிடர் மழைக்காலத்தில் மரப்பலகை, தெர்மாகோல் சீட்டு, காலி சிலிண்டர், தண்ணீர் இல்லாத 20 லிட்டர் வாட்டர் கேன் உள்ளிட்டவைகளை கொண்டு அவசர காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று செயல் விளக்கம் அளித்தனர்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, மாவட்ட பிற்பட்டோர் துறை துணை கலெக்டர் ரவி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.