பொள்ளாச்சி அருகே விபரீதம்: மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்த 10-ம் வகுப்பு மாணவன் பஸ்சில் மோதி பலி
பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்த 10-ம் வகுப்பு மாணவன் பஸ்சில் மோதி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்த 10-ம் வகுப்பு மாணவன் பஸ்சில் மோதி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவன்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனூரை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் தமிழரசு (வயது 14). புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இதே பள்ளியில் அவரது அண்ணன் கவியரசு (16) பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் கவியரசு பள்ளிக்கு வரவில்லை.
இந்த நிலையில் மாலையில் பள்ளி முடிந்ததும் தம்பி தமிழரசுவை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு, தனது நண்பனின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு கவியரசு புரவிபாளையம் பள்ளிக்கு வந்தார். அப்போது தமிழரசு மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்ப்பதாக கூறி வாங்கி சென்றார். நடுப்புணி ரோட்டில் சிறிது தூரம் சென்று விட்டு பின்னர் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.
பஸ் மோதி சாவு
பள்ளி பஸ் நிறுத்தத்தில் நடுப்புணியில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் அரசு பஸ் நின்று மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் தமிழரசு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் கீழே விழுந்ததில் தமிழரசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரியில் தமிழரசுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முன் விபத்தில் சிக்கி தமிழரசு இறந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
சுய ஒழுக்கம் தேவை
விபத்தில் சிக்கி இறந்த மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அதிக குதிரை திறன் கொண்டது. 18 வயது பூர்த்தி செய்யாத குழந்தைகளை பெற்றோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு அனுமதிக்க கூடாது. விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் தான் பள்ளியில் போக்சோ, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மாணவ- மாணவிகள் வாகனங்களை ஓட்டி செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மாணவ-மாணவிகளுக்கு சுய ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற விபத்துகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.