தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ரூ.27¼ லட்சம் கையாடல்


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ரூ.27¼ லட்சம் கையாடல்
x
சேலம்

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் ரூ.27¼ லட்சம் கையாடல் செய்ததாக பெண் ஆடிட்டரை போலீசார் கைது செய்தனர்.

வருங்கால வைப்புநிதி

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சேலம் அருகே செயில் பேக்டரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், வருங்கால வைப்பு நிதி கேட்டால் அதனை சரிபார்த்து கொடுக்கும் வகையில் ஆடிட்டர் சிவகுரு என்பவருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது அலுவலகத்தில் சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த கிருத்திக்ராஜ் மனைவி சிந்துஜா (வயது 35) என்பவர் ஆடிட்டராக பணியாற்றி வந்தார்.

அங்கு வேலை பார்த்த 11 தொழிலாளர்கள், வருங்கால வைப்புநிதியை கேட்டு விண்ணப்பம் செய்ததாக அவர்களுக்கு ரூ.27 லட்சத்து 24 ஆயிரத்து 318 காசோலை போடப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் 11 பேரும் பணம் கேட்டு விண்ணப்பமே செய்யவில்லை என்பதும், அவர்களுக்கான காசோலையை சிந்துஜா, அதேபெயர் கொண்ட உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து பின்னர் அந்த பணத்தை வசூல் செய்ததும் தெரியவந்தது.

பெண் ஆடிட்டர் கைது

இந்த காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட அதிகாரிகளான ஸ்ரீதரன், உமேஷ் ஆகியோர் அதில் கையெழுத்திட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சேலம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிந்துஜாவை போலீசார் கைது செய்தனர். இந்த கையாடலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story