ஒழுக்கமும், நேர்மையும் காவலர்களின் இருகண்களாக இருக்க வேண்டும்: திருச்சி சரக டி.ஐ.ஜி. அறிவுறுத்தல்


ஒழுக்கமும், நேர்மையும் காவலர்களின் இருகண்களாக இருக்க வேண்டும்: திருச்சி சரக டி.ஐ.ஜி. அறிவுறுத்தல்
x

பயிற்சி காவலர்களுக்கான நிறைவு விழாவில் ஒழுக்கமும், நேர்மையும் காவலர்களின் இருகண்களாக இருக்க வேண்டும் என டி.ஐ.ஜி. அறிவுறுத்தினார்.

கரூர்

பயிற்சி நிறைவு விழா

தமிழகம் முழுவதும் தமிழக காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள் அடிப்படை பயிற்சி பெற்று வந்தனர். இதில் கரூர் மாவட்டத்தில் 97 காவலர்கள் பயிற்சி காவலராக கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் கரூர் ஆயுதப்படை வளாகத்தில் பயிற்சி செய்து வந்தனர். இந்த பயிற்சி காவலர்களின் பயிற்சி முடிந்ததையடுத்து, பயிற்சி காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று கரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், கரூர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வருமான சுந்தரவதனம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கலந்து கொண்டு பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அர்ப்பணிப்பு உணர்வுடன்...

பின்னர் திருச்சி சரக டி.ஐ.ஜி. காவலர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களாக பணியில் சேர்ந்துள்ள நீங்கள் காவல்துறையின் மாண்பையும், பெருமையையும் போற்றி பாதுகாக்கும் வகையில் உங்கள் செயல்பாடுகளை அமைத்து கொள்ள வேண்டும்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் பணியிலும், நடத்தையிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒழுக்கமும், நேர்மையும் காவலர்களின் இருகண்களாக இருக்க வேண்டும். பொது இடங்களில் பணிபுரியும்போது கண்ணியத்தையும் மற்றும் பணியில் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். இளம்வயதில் காவலர்களாக பணியில் சேர்ந்துள்ள நீங்கள் எந்தவிதமான கவனசிதறல்களுக்கும் ஆட்படாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். சட்டங்களை மதித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story