கட்டிடத்தின் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு


கட்டிடத்தின் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு
x

கட்டிடத்தின் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் இயங்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் செலுத்த வேண்டிய வரி பாக்கி மற்றும் குத்தகை பாக்கி, வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி பாக்கியை ெசலுத்த பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட கடை, வணிக நிறுவனங்கள், வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்கள் வரியை செலுத்தாததால் ரூ.27 கோடியே 40 லட்சம் வரி மற்றும் வாடகை பாக்கி நிலுவை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரி மற்றும் வாடகை பாக்கி செலுத்தாத கடை மற்றும் வீடுகளின் உரிமையாளர்களிடம் வரி வசூல் செய்யும் பணிகளில் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன் உத்தரவின்பேரில் வரி மற்றும் வாடகை தர மறுக்கும் கடைகளுக்கு 'சீல்' வைக்கும் பணிகளில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு ராஜ வீதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாததால், நகராட்சி வருவாய் அலுவலர் விஜயாஸ்ரீ தலைமையில் வருவாய் ஆய்வாளர் பாசித் மற்றும் பணியாளர்கள் நேரில் சென்று கட்டிடம் முன்பு பாதாள சாக்கடையை அடைத்து, அறிவிப்பு பலகையை வைத்தனர். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி, வாடகை பாக்கி, குத்தகை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்தந்த நிறுவனம் மற்றும் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என்றும், அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாத வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவு நீர் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story