அரசமுத்திரையுடன் கூடிய சூல கற்கள் கண்டுபிடிப்பு


அரசமுத்திரையுடன் கூடிய சூல கற்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 17 Sep 2022 6:45 PM GMT (Updated: 17 Sep 2022 6:45 PM GMT)

மானாமதுரை அருகே பாண்டியர் கால நிலக்கொடை குறித்த அரசமுத்திரையுடன் கூடிய சூல கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை அருகே பாண்டியர் கால நிலக்கொடை குறித்த அரசமுத்திரையுடன் கூடிய சூல கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரச முத்திரை

மானாமதுரைஅருகே உள்ள சின்னகண்ணனூர் பகுதியில் பாண்டியர் காலத்து நிலக்கொடை குறித்த அரச முத்திரையுடன் கூடிய சூல கற்கள் இருப்பதாக அக்கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் இந்த கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது:-

இதற்கு முன்னதாக ஒரு நிலக்கொடை கல்லானது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 2 நிலக்கொடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற நிலக்கொடை வழங்கும் ஒவ்வொரு ஆட்சியாளரும், 4 திசைகளிலும் நான்கு கற்களை நட்டு அதில் தமது முத்திரையும், எந்த நோக்கத்திற்காக அல்லது எந்த கோவிலுக்கு வழங்கப்பட்டது என்ற குறியீடுகளையும் புடைப்பு சிற்பமாக அந்த கற்களில் இடம் பெறச்செய்வார்கள்.

திரிசூலம்

அதாவது சிவன், அய்யனார், காளி ஆகிய கோவில்களுக்கு கொடுக்கும் நிலக்கொடைக்கற்களில் திரிசூலம் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு அதை தேவதானம் என்பார்கள். இதேபோல் பெருமாள் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை கற்களில் சங்கு, சக்கரம் இடம்பெற்றிருந்தால் திருவிடையாட்டம் என்றும், சமண கொடையை குறிக்கும் வகையில் முக்குடையும், பவுத்த கொடையை குறிக்கும் வகையில் தர்மசக்கரமும் இடம் பெற்றிருந்தால் அதை பள்ளிச்சந்தம் என்றும் அழைப்பார்கள்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட 3 கற்களிலும் ஒரு திரிசூலமும், திரிசூலத்தின் இடது புறம் பாண்டியர் ஆட்சியாளர்களின் செண்டு கோலும், சூலத்திற்கு வலதுபுறம் ஒரு மீனும், நீள்வாக்கில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் மீனும், செண்டினையும் பார்க்கும்போது இந்த பகுதியில் பிற்கால பாண்டியர் ஆட்சி காலத்தில் ஒரு சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். அக்கோவிலுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

பிற்கால பாண்டியர்

மேலும் பிற்கால பாண்டியர் ஆட்சியின் கீழ் இந்த பகுதி இருந்திருக்கலாம் எனவும் இதன் மூலம் அறிய முடிகிறது. இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட சூலக்கல் போன்றே தற்போது கண்டுபிடித்த இந்த 2 சூல கற்களிலும் சூலம், மீன் மற்றும் செண்டும் இருப்பதால் இவை அனைத்தும் பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த நிவந்தம் தொடர்பான கொடைக்கற்களாக நாம் கருதலாம்.

இந்த பகுதியில் முறையான ஆய்வை அரசு மேற்கொண்டால் இப்பகுதியின் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதற்கான போதிய ஆதாரங்கள் அதிக அளவில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story