1,400 ஆண்டுகள் பழமையான கோவில் குளத்தில் 7 உறைகிணறுகள் கண்டுபிடிப்பு


1,400 ஆண்டுகள் பழமையான கோவில் குளத்தில் 7 உறைகிணறுகள் கண்டுபிடிப்பு
x

1,400 ஆண்டுகள் பழமையான கோவில் குளத்தில் 7 உறைகிணறுகள் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சையில், மன்னர் குளித்ததாக கூறப்படும் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளத்தை தூர்வாரியபோது 7 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

மன்னர் நீராடிய கோவில் குளம்

தஞ்சை கரந்தையில் கருணாசாமி என்ற வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. 1,400 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அருகே சூரிய புஷ்கரணி என்று அழைக்கப்படும் குளம் உள்ளது. இந்த குளம் 5½ ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

கருங்குஷ்ட நோயினால் அவதிப்பட்ட சோழமன்னன் இந்த குளத்தில் குளித்தபோது மன்னனுக்கு இருந்த குஷ்ட நோய் சிவபெருமானின் கருணையால் நீங்கியதாக கூறப்படுகிறது. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் இந்த குளத்தில் இருந்தோ அல்லது கோவில் கிணற்றில் இருந்தோ நீர் கொண்டு வந்து ஜூரஹரேஸ்வரர் அமைந்துள்ள தொட்டியில் நிரப்பி வழிபட்டால் நோயின் கடுமை குறையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

சுரங்க நீர்வழிப்பாதை

இந்த கருணாசாமி கோவில் குளத்துக்கு தஞ்சை வடவாற்றில் இருந்து பூமிக்கு அடியில் சுரங்க நீர்வழிப்பாதை மூலம் தண்ணீர் வரும். அதே போல குளத்தின் ஈசான மூலையில் இருந்து தண்ணீர் வெளியேறும். கடந்த 2001-ம் ஆண்டு முதல் குளத்திற்கு வரும் நீர் வழிப்பாதை அடைபட்டு விட்டது. தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், பல்வேறு ஆக்கிரமிப்புகளாலும் நீர் வழிப்பாதை அடைபட்டு தண்ணீர் வருவது தடைபட்டு விட்டது. மேலும் குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகளும் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த பகுதி மக்கள் மற்றும் சிவனடியார்கள் சேர்ந்து குளத்தை தூர்வாரி தண்ணீர் தேக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு பொதுமக்களின் பங்களிப்புடன் குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். மேலும் குளத்திற்கு வடவாற்றில் இருந்து நீர் வரும் பாதையையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து வடவாற்றில் இருந்து 450 மீட்டர் நீளம் சுரங்க நீர்வழிப்பாதையையும் சரி செய்து தண்ணீர் கொண்டு வந்தனர். இதற்கு இடையூறாக இருந்த பாதாள சாக்கடை குழாய்களையும், மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறி மாற்றி அமைத்தனர்.

குளம் தூர்வாரும் பணி

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளின் ஒரு பகுதியாக கருணாசாமி கோவில் குளத்தை ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி சுற்றிலும் நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவில் குளம் தூர்வாரும் பணிகள் பொக்லின் எந்திரம் மூலம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.

உறைகிணறுகள் கண்டுபிடிப்பு

கடந்த 2 நாட்களாக குளத்தை தூர்வாரியபோது ஆங்காங்கே 3 அடி சுற்றளவு கொண்ட சுடுமண்ணால் ஆன உறைகிணறுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சில கிணறுகளில் தற்போதும் தண்ணீர் பொங்கி வழிந்த வண்ணம் உள்ளது. அரை அடிக்கு ஒரு அடுக்கு என்ற அடிப்படையில் சுடுமண்ணை கொண்டு இந்த கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 7 உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளம் முற்றிலும் தூர்வாரப்படும்போது இன்னும் பல உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்படும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story