சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு


சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
x

சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி

கல்வெட்டு

திருச்சி-குளித்தலை நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ள அல்லூர் பசுபதீசுவரர் கோவில் முதல் பராந்தக சோழர் ஆட்சிக்காலத்தில் (பொதுக்காலம் 924) கட்டப்பட்டது. இங்கிருந்து அரசின் கல்வெட்டுத்துறையால் 15 கல்வெட்டுகள் 1903-ல் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பாடங்களை சரிபார்க்கவும், கட்டிடக்கலை நுட்பங்களை அறியவும், கோவிலார் துணையுடன் பேராசிரியர் நளினி, முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் அகிலா ஆகியோர் அங்கு ஆய்வு செய்தபோது, புதிய கல்வெட்டும், ஏற்கனவே படியெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றின் விட்டுப்போன பகுதியையும் கண்டறிந்தனர்.

இந்த கல்வெட்டுகளை டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குனர் டாக்டர் கலைக்கோவன் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இறையகம் முன்பு மண்டபம்

பசுபதீசுவரர் கோவில் கட்டப்பட்ட காலத்தில் இறையகம், அதன் முன்பு ஒரு மண்டபம் என இரு கட்டுமானங்கள் இருந்தன. பின்னாளில் தெற்கிலும், வடக்கிலும் கற்சுவர்கள் அமைத்து இந்த மண்டபத்தை இறையகத்துடன் இணைத்துள்ளனர். இங்குள்ளதுபோல் இறையகத்தின் முன் தனிமண்டபம் அமைக்கும் பழக்கம் பல்லவர் கால பழமையானது.

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில் ஆகியவற்றில் இந்த மரபு பின்பற்றப்பட்டுள்ளது. முற்சோழர் காலத்திலும் இந்த மரபின் தொடர்ச்சியாக இறையகங்களின் முன் தனி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது புதிய கல்வெட்டால் தெரியவருகிறது.

கோவிலுக்கு அளித்த நிலம்

மண்டபசுவரில் வாயிலின் தென்புறம் பொறிக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டு, இந்த பகுதியை ஆட்சி செய்த மதுராந்தகன் ஒற்றி எனும் கொடும்பாளூர் வேளிர்குல அரசரின் பெயரால் எடுக்கப்பட்டது. அல்லூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வீரநாராயணபுரத்து வணிகரான முனைச்சுடர் விரையாச்சிலை இந்த கட்டுமானத்தை எழுப்பியுள்ளார். மண்டபத்தின் வடமேற்கு சுவரில் உள்ள மற்றொரு கல்வெட்டு வேளிர் அரசர் மதுராந்தகன் அல்லூர் ஊராருக்கு அனுப்பிய அரசாணையாக அமைந்துள்ளது.

மண்டபத்தை எடுப்பித்த முனைச்சுடர் விரையாச்சிலை, இறைவனுக்கு தேவியாக உமையன்னையின் செப்புத் திருமேனியை இந்த கோவிலில் எழுந்தருளிவித்தார். இறைவிக்கான வழிபாடு படையல்களுக்காக அவர் விலைக்கு பெற்று கோவிலுக்கு அளித்த தோட்ட நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அதன் மீதான வரிகளை நீக்கும்படி ஊராட்சி அலுவலர்களுக்கு அரசாணை அறிவுறுத்தியது. மன்னரின் ஆணையுடன் இந்த ஓலையை ஊரார் எப்படி வரவேற்று படித்து அதன் உள்ளீட்டை நிறைவேற்றினர் என்பதையும் இந்த கல்வெட்டால் அறியமுடிகிறது. இந்த இரு கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பு பற்றிய தகவல் கல்வெட்டுத்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story