மணம்பூண்டியில்பல்லவர்கால விநாயகர் சிலை கண்டுபிடிப்பு

மணம்பூண்டியில் பல்லவர்கால விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
மணம்பூண்டி,
கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில் கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், வரலாற்றுப்பேராசிரியர் ரா.ஸ்தனிஸ்லாஸ், நல்நூலகர் மு.அன்பழகன், மு.கலியபெருமாள் ஆகியோர்
மணம்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், தென்பெண்ணை ஆற்றங்கரையின் இடதுபுறத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு சாலையோரம் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் பல்லவர் கால விநாயகர் புடைப்புச் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது. 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட இந்த சிற்பத்தில் எழுத்துக்கள் ஏதுமின்றி, தலையில் கிரீடம் மற்றும் வலது பக்க தும்பிக்கையும், வலது மேற்கரத்தில் பாசாங்கயிறும், புஜத்தில் வாகுவளையமும், இடது மேற்கரத்தில் வளரி அல்லது சிறுதடி போன்ற ஒரு பொருளும், மணிக்கட்டில் காப்பும், கழுத்தில் சவடி அணிகலனும், மார்பில் முப்பிரி நூலும், வயிற்றுப்பகுதியில் உதரமங்குணமும் இருந்தது. உட்குழ ஆசன நிலையில் கால்கள் மடங்கியபடி, இடையில் சிற்றாடையுடன் அமர்ந்த நிலையில் இச்சிற்பம் அமைந்துள்ளது. தும்பிக்கை வலது பக்கத்தில் திரும்பி இருப்பதால் இது வலம்புரி விநாயகர் என கருதப்படுகிறது. மேற்கொண்டு இச்சிற்பத்தில் அதிக அளவில் ஆபரண வடிவங்கள் ஏதும் இல்லாததால், கி.பி. 9-ம் நூற்றாண்டின் பிற்கால பல்லவர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பல்லவர்கள் பெரும்பாலும் புராணங்களை அடிப்படையாகக் கொண்டே சிற்பங்களை செதுக்கியுள்ளனர். இச்சிலை இருந்த இடத்திற்கு அருகிலேயே மேற்பரப்பில் கழிவுநீர் கால்வாயும், ஆங்காங்கே ஒரு சில கற்தூண்கள் இருப்பதாலும், ஏற்கனவே இ்ங்கு கோவில் இருந்திருக்கலாம் எனவும், காலப்போக்கில் சிதலமடைந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.