திருஞானசம்பந்தர் பாடல் பதியப்பட்ட தங்க ஏடு கண்டெடுப்பு


திருஞானசம்பந்தர் பாடல் பதியப்பட்ட தங்க ஏடு கண்டெடுப்பு
x

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோவிலில் திருஞானசம்பந்தர் பாடல் பதியப்பட்ட தங்க ஏடு கண்டெடுக்கப்பட்டது.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோவிலில் திருஞானசம்பந்தர் பாடல் பதியப்பட்ட தங்க ஏடு கண்டெடுக்கப்பட்டது.

ஏடகநாதர் கோவில்

மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம் ஆகும்.இத்திருத்தலம் காசிக்கு நிகரான சிறப்புடையதாகும். இந்த கோவிலின் மூலவர் ஏடகநாதேஸ்வரர். .தாயார் ஏலவார்குழலி.

இத்தகைய சிறப்புமிக்க திருவேடகம் கோவிலில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட திருக்கோவில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு - பராமரிப்பு- நூலாக்கத் திட்ட பணிக்குழுவினர் சுவடிகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் இருந்த தங்க ஏடு ஒன்றும் கோவில் வரவு செலவு கணக்குகள் அடங்கிய ஒரு சுவடிக்கட்டும் கண்டறிந்தனர்.

இது குறித்து சுவடித்திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் ஓலைச்சுவடிகள், செப்புப்பட்டயங்கள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செயலாக்க நடவடிக்கையின்படியும் நாங்கள் தொடர்ந்து கள ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை 200-க்கும் அதிகமான கோவில்களில் கள ஆய்வு செய்து முடித்துள்ளோம்.

திருஞானசம்பந்தர் இயற்றிய பாடல்

இந்த நிலையில் திருவேடகம் ஏடகநாதர் கோவிலில் எனது வழிகாட்டலின் படி சுவடிக்கள ஆய்வாளர்கள் கோ.விசுவநாதன், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது தங்கத்தால் செய்யப்பட்ட தங்க ஏடு ஒன்றை கண்டறிந்தனர்.

மேலும் கோவிலில் இருந்த ஒலைச்சுவடிக் கட்டு ஒன்றையும் கண்டறிந்தனர்.அவற்றை நான் ஆய்வு செய்த போது தங்க ஏட்டில் திருஞானசம்பந்தர் இயற்றிய பாடல் ஒன்று எழுதப்பட்டுள்ளதைக் கண்டறிந்தேன். மேலும் கோவிலில் இருந்த ஓலைச்சுவடியில் கோவில் வரவு செலவு விவரம் அடங்கிய தகவல்கள் இருப்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்தேன்.

இலக்கியப் பாடல் தங்க ஏட்டில் பதிந்த நிலையில் கிடைப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இதனை, திருவேடகநாதர் கோவில் தல புராணம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

நீரோட்டை எதிர்த்து சென்ற ஏடு

அதாவது, மதுரையை கூன்பாண்டியன் எனும் மன்னர் ஆண்டு வந்தார். அவர் சமண சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தார். அவரது மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவபக்தை. சைவ சமயத்தை காப்பாற்ற எண்ணி அவள் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதன்பேரில் மதுரைக்கு வந்த திருஞானசம்பந்தர் திருநீறு பூசி கூன்பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார். அதனைக் கண்டு அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று அனல் வாதம், புனல் வாதம்புரிய அழைத்தனர். சமணர்கள் அதன்படி, தமது சமய மார்க்கம் சார்ந்த கருத்துடைய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆனது. ஆனால், திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் இருந்தது. பின்பு புனல்வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டனர்.அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் "வாழ்க அந்தணர்......" என்று தொடங்கும் பதிகமுள்ள ஏட்டை வைகை ஆற்றில் விட்டார். அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது. பாண்டிய மன்னனின் மந்திரியான குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்துச் செல்லும் ஏட்டினைப் பின் தொடர்ந்து சென்றார். ஏடு ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. அதனை அறிந்த பாண்டிய மன்னர் ஏடு கரை ஒதுங்கிய இடத்திற்கு வந்து பார்த்தார். அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டார். பின்பு அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அந்த கோவில் திருவேடகநாதர் கோவில் என்று அழைக்கப்பட்டது என்று தல புராணம் குறிப்பிடுகிறது.

பாதுகாக்க வேண்டும்

இந்த கதையில் திருஞானசம்பந்தர் "வாழ்க அந்தணர்....."எனும் பதிகம் எழுதி நதியிலிட்டதன் நினைவாக அதே பாடலைத் தங்க ஏட்டில் எழுதி வைத்து கோயிலார் பாதுகாத்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. தங்க ஏட்டில் மேற்சுட்டிய ஒரு பாடல் மட்டுமே உள்ளது. தங்க ஏடு எழுதப்பட்ட காலம் பற்றிய குறிப்பு ஏட்டில் காணப்படவில்லை. எனினும் சுவடியிலுள்ள எழுத்தை பார்க்கும் போது சுமார் 100 ஆண்டுகள் பழமையாக இருக்கலாம்.

திருக்கோவில் சுவடி மற்றும் செப்புப்பட்டயங்களைப் பாதுகாக்க சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story