இரும்பு உருக்காலை எச்சம் கண்டுபிடிப்பு
இரும்பு உருக்காலை எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது.
மானாமதுரை,
மானாமதுரை அருகே பெரிய மாங்குடி கிராமத்தில் காட்டுப்பகுதியில் காணப்பட்ட கற்கள் மற்றும் பானை ஓடுகள் வித்தியாசமான முறையில் இருந்தது. இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் அங்கு கள மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது பழங்கால இரும்பு உருக்காலை இருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது- இப்பகுதியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய்கள் அதன் மேற்பரப்பில் சிதைவுற்று காணப்படுகிறது. மேலும் இரும்பு உருக்கும் உலைகளில் பயன்படுத்தப்படும் கெண்டியின் பாகங்களும் அதிக அளவில் சிதைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் இரும்பை உருக்கும்போது கிடைக்கும் சிறிய துண்டுக்கழிவுகளும், இரும்பு தாது இடம் பெறும் மூலப்பொருட்களான பெரியகற்களும் ஏராளமாக காணப்படுகிறது. மேலும் இரும்பை உருக்க பயன்படும் எரியூட்டும் அடுப்பு போன்ற அமைப்பும் உள்ளது. மேலும் சிவப்பு பானை ஓடுகளும், கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும், அதன் விளிம்பு பகுதியில் வரிவரியாய் கோடுகளுடன் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளது. செம்பூரான் கற்கள் செம்பூரான் பாறையிலேயே சற்று தரமான கற்களும் அதிகளவில் உள்ளது. மேலும் இந்த பாறையில் இரும்பிற்கான மூலப்பொருள் இருப்பதையும், அதனை எரியூட்டி உருக்கினால் இரும்பு பொருட்கள் செய்யலாம் என்பதையும் அக்காலமக்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. இதன் மூலம் பழங்காலத்தில் இங்கே வாழ்ந்த மக்கள் இரும்பு பொருட்களை தயாரிக்கும் தொழிற்கூடமாக இப்பகுதியை பயன்படுத்தியிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.