நாயக்கர் கால மடைத்தூண் கல்வெட்டு கண்டெடுப்பு


நாயக்கர் கால மடைத்தூண் கல்வெட்டு கண்டெடுப்பு
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாயக்கர் கால மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

மடைத்தூணில் கல்வெட்டு

மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மு.பரமசிவம் புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டி பகுதியில் குமிழிக் கல்வெட்டுகள் காணப்படுவதாக தந்த தகவலையடுத்து முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர.அகிலாவும், திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் மு.நளினியும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திம்மயம்பட்டிக்கும் குறும்பட்டிக்கும் இடையிலுள்ள மாங்குளத்து மடைத்தூண் ஒன்றில் கல்வெட்டிருப்பதை கண்டறிந்தனர்.

அக்கல்வெட்டை ஆய்வுசெய்த டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா.கலைக்கோவன், இரண்டாண்டுகளுக்கு முன் இதே பகுதியிலுள்ள திம்மயம்பட்டிக் குளத்தின் கரையிலிருந்த மடைத்தூண்களில், இரண்டு சோழர் காலக் கல்வெட்டுகளை மைய ஆய்வர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். கிழவன் பவழக்குன்றான கண்டாங்குச வேளானும் வைய்கை சூற்றியான உத்தமசோழ உறத்தூர் நாட்டுக் கிழவனும் அம்மடைக்கற்களை வழங்கியிருந்த செய்தியும் அக்கற்கள், 'தலை நீரழிக்கல்' என்று வழங்கப்பட்ட தகவலும் அக்கல்வெட்டுகளால் தெரியவந்தன.

16-ம் நூற்றாண்டுக்குரியது

மாங்குளக் கரையில் நடப்பட்டுள்ள மடைத்தூண்கள் இரண்டும் ஏறத்தாழ 3. 72 மீ. உயரமும் 36 செ.மீ. அகலமும் பெற்று நெடிதோங்கி உயர்ந்துள்ளன. அவற்றின் கனம் 22 செ.மீ. வலம் இடமாக உள்ள அவ்விரண்டு தூண்களில் இடது தூணில்தான் கல்வெட்டுப் பொறிப்புக் காணப்படுகிறது. தமிழ் எழுத்துக்களில் ஏழுவரிகளில் செதுக்கப்பட்டுள்ள அக்கல்வெட்டு எழுத்தமைதி அடிப்படையில் 16 அல்லது 17-ம் நூற்றாண்டுக்குரியதெனலாம்.

அக்காலக்கட்டத்தில் இப்பகுதியில் வாழ்ந்த பெருந்தனக் காரராகவோ, உள்ளாட்சி அமைப்பின் தலைவராகவோ இருந்த கர்ணம் நாராயண சேமநாயக்கர் எனும் பெருந்தகை அப்பகுதி வேளாண்மைக்கும், மக்களுக்கும் பயன்படுமாறு பேரளவிலான இம்மாங்குளத்தை அகழ்ந்து உருவாக்கி, மடைத் தூண்களையும் நிறுவியுள்ளார். இத்தகவலைத் தரும் கல்வெட்டு மடைத்தூணின் நடுப்பகுதியில் வெட்டப்பட்டிருப்பதால் சேதமடையாமல் இன்றும் நன்னிலையில் உள்ளது.

வரலாற்று தகவல்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகள், குளங்கள், ஊருணிகளில் இவை போன்ற மடைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் பலவற்றில் அத்தூண்களை அமைத்தவர் குறித்த வரலாற்றுத் தகவல்கள் செதுக்கப் பட்டிருப்பதாகவும் கூறும் டாக்டர் இரா.கலைக்கோவன் இப்புதிய கண்டுபிடிப்புப் பற்றிய தகவல் கல்வெட்டுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.


Next Story