சங்ககால அகல் விளக்குகள் கண்டெடுப்பு


சங்ககால அகல் விளக்குகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:45 PM GMT)

புதுப்பேட்டை அருகே தென்பெண்ணையாற்றில் சங்க கால அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டன.

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்டம் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சுடுமண்ணாலான அகல் விளக்குகளை அவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் :- எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள சுடுமண் அகல் விளக்குகளில் ஒன்று தட்டு வடிவில் நான்கு திரிகளை கொண்டதாகவும், இரண்டாவது விளக்கு கருப்பு நிறத்தில் ஒற்றை திரியுடன் பாதி உடைந்த நிலையில் அழகிய கலை நயத்துடனும், மூன்றாவது விளக்கு உடைந்த நிலையில் கலைநயத்துடன் சிவப்பு நிறத்தில் ஒற்றை திரியுடன் காணப்படுகிறது.

விளக்கு அவசியம்

இந்த விளக்குகள் சங்ககாலத்தை சேர்ந்ததாகும். பண்டைய காலத்தில் மனிதன் நெருப்பின் அவசியத்தை அறிந்திருந்தான். நாகரிகம் அடைந்த பிறகு புதிய கற்காலத்தில் ஓர் இடத்தில் தங்கி வாழ ஆரம்பித்தான். அப்போது அவனுக்கு விளக்கு அவசியமாக இருந்தது. இதையடுத்து அவன் ஈரமான களிமண்ணை எடுத்து கைவிரலால் சற்று குழியாக செய்து சிறிய விளக்குகள் போல செய்து பயன்படுத்தி கொண்டான்.

தமிழகத்தில் பையம்பள்ளி, மோதூர், அப்புகல்லு ஆகிய இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வில் கையினால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் மதுரை கீழடி, ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் சுடுமண் அகல்விளக்குகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் கண்டறியப்பட்ட அகல் விளக்குகள் கீழடி மற்றும் அரிக்கமேடு பகுதி அகழ்வாய்வுகளில் கண்டறிந்த அகல் விளக்குகளோடு இவை ஒற்றுபோகிறது. எனவே சங்ககால மக்கள் தென்பெண்ணையாற்றங்கரை பகுதிகளிலும் வாழ்ந்து இருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது என்றனர்.


Next Story