மின்கம்பங்களை மாற்றி அமைப்பதில் பாரபட்சம்:பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு


மின்கம்பங்களை மாற்றி அமைப்பதில் பாரபட்சம்:பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jan 2023 6:45 PM GMT (Updated: 27 Jan 2023 6:46 PM GMT)

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்களை மாற்றி அமைப்பதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

தேனி

சாலை மறியல்

கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் வடக்கு காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் பாலம் வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சாலையோர ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவை அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. சாலையோரங்களில் உள்ள மின்கம்பங்கள், மரங்கள் அகற்றப்படாததால் தார் சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது வடக்கு போலீஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சில இடங்களில் மின்கம்பங்கள். மாற்றி அமைப்பதில் பாரபட்சம் காட்டி வருவதாக பொதுமக்கள் கூறினர். இந்நிலையில் மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பேச்சுவார்த்தை

இதற்காக கூடலூர் காய்கறி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடினர். இந்த தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்கம்பங்களை மாற்றி அமைப்பதில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் கூறினர்.

பின்னர் பாரபட்சம் இன்றி முறையாக மின்கம்பங்கள் மாற்றி அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேச நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் உறுதி அளித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story