மேற்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்
தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் தர்மபுரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொள்கிறார்.
கலந்துரையாடல் கூட்டம்
தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள், முன்னோடிகள் கலந்துரையாடல் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு தர்மபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் அவர் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்தும் விளக்கி பேசுகிறார். கூட்டத்தில் கட்சியின் கவுரவத்தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
வேண்டுகோள்
இது தொடர்பாக தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தர்மபுரியில் இன்று நடைபெறும் மேற்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொள்கிறார். கட்சி தலைவரை சிறப்பான முறையில் வரவேற்கும் வகையில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வன்னியர் சங்கம், இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, பாட்டாளி சமூக ஊடகப்பேரவை, பசுமைத் தாயகம், தேர்தல் பணி குழு, தமிழ்நாடு உழவர் பேரியக்கம், சிறுபான்மை பிரிவு, கொள்கை விளக்க அணி, பாட்டாளி தொழிற்சங்கம், கலை இலக்கிய அணி, சமூக முன்னேற்ற சங்கம், வக்கீல் சமூக நீதிப்பேரவை ஆகிய சார்பு அமைப்பு நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் தவறாது கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.