பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் நியமனத்துக்கு எதிராக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையிட்டு மனுவை நேற்று நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பு அளித்தனர். இதனை வரவேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நேற்று மதியம் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
பின்னர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கூறுகையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்து உள்ளன. ஆகையால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியிடம்தான் என்பதை ஓ.பன்னீர்செல்வம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீர்ப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது. அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு உள்ளனர். அ.தி.மு.க. வலுவாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவார். அவர் சுட்டிக்காட்டுபவர் பிரதமராக வருவார் என்றார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் தட்டார்மடம் ஞானப்பிரகாசம், முன்னாள் அரசு வக்கீல் சுகந்தன் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலை முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. ஒற்றை தலைமை வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவு எடுத்து பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து நீதிமன்றங்களிலும் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர், ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு வந்தது. எடப்பாடி பழனிசாமி தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற இறுதி தீர்ப்பு இன்று (அதாவது நேற்று) வந்துள்ளது. தர்மம் மற்றும் நியாயத்தின் பக்கம் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தவிர அவருடன் இருப்பவர்கள் அ.தி.மு.க.விற்கு வந்தால் வரவேற்போம் என்றார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.