இலவச வேட்டி சேலைகளை திருடியதாக வி.ஏ.ஓ. மீது பதியப்பட்ட வழக்கு ரத்து - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு


இலவச வேட்டி சேலைகளை திருடியதாக வி.ஏ.ஓ. மீது பதியப்பட்ட வழக்கு ரத்து - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
x

வி.ஏ.ஓ. மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

காரைக்குடியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செயத் மனுவில், சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் கிராமத்தில் அவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய போது இலவச வேட்டி, சேலைகளை திருடி பதுக்கியதாக கடந்த 2017-ம் ஆண்டு தன் மீது போலியான வழக்கு பதியபட்டதாகவும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது மனுதாரர் நேர்மையான பணியாளர் என்பதால் உயர் அதிகாரிகளால் பழிவாங்கப்படுவதாகவும், அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளுக்கு கிராம நிர்வாக அதிகாரி பொறுப்பாக மாட்டார் எனவும் வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இலவச வேட்டி, சேலைகளை திருடியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் மனுதாரரின் வாதம் கவனிக்கத்தக்கது என்று குறிப்பிட்டனர். மனுதாரரான கிராம நிர்வாக அலுவலர் மீது மட்டுமே வேட்டி, சேலைகள் காணாமல் போனது குறித்து பொறுப்பு சுமத்த முடியாது என்றும் இலவச வேட்டி, சேலைகளுக்கான பொறுப்பாளர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆவார் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர் மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.




Next Story