பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய வழக்கு முடித்துவைப்பு


பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய வழக்கு முடித்துவைப்பு
x

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்துவைத்தது.

சென்னை,

பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று அரசு கடந்த 22-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து வினியோகிக்கப்பட உள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிட்டுள்ளோம். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

இதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி டிசம்பர் 24-ந்தேதி தமிழ்நாடு அரசுக்கு மனு அளித்தேன். அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த மனு சென்னை ஐகோர்டில் கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்த மனு மீதான விசாரணையை வரும் திங்கள் கிழமை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதனை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் உத்தரவிடக் கோரிய வழக்கை ஜன.2-ம் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்தனர்.

அதன்படி, இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.


Next Story