குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட ரசாயன ஆலை கழிவுகள் அகற்றம்


குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட ரசாயன ஆலை கழிவுகள் அகற்றம்
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட ரசாயன ஆலை கழிவுகள் அகற்றப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தை அடுத்த கண்டம்பாக்கம் கிராமத்தில் உள்ள ரெயில் நிலையம் அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மற்றும் பொது இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரிகள் மூலம் மண் போன்ற கலவை கொட்டப்பட்டது. அவை நீளநிறத்திலும், கருப்பு நிறத்தில் இருப்பதாலும், அவற்றில் இருந்து வெளியேறும் துகள்களால் கண் எரிச்சல், தொண்டை வலி ஆகியவை ஏற்பட்டது. இவை ரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளாக இருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகித்தனர். கெமிக்கல் கழிவுகளை லாரிகள் மூலம் ஏற்றி வந்து கிராமத்தின் மத்தியில் கொட்டியதால் ரசாயன பவுடர் படிந்து அதே கிராமத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் மூச்சு திணறல், தொண்டை வலி, கண் எரிச்சல் ஆகியவைகளால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர். இந்த ரசாயன கழிவுகளை கொட்டியவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பதோடு உடனடியாக அங்கிருந்து அந்த கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று புகைப்படத்துடன் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக அந்த ரசாயன ஆலை கழிவுகளை கொண்டு வந்து கொட்டியவர்களே, நேற்று இரவோடு இரவாக அதனை அள்ளிச்சென்றுள்ளனர். இன்று காலை சில கழிவுகள் மற்றும் அங்குள்ள சாலையில் ஒட்டியவாறு இருந்தது. அதனை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தை சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story