தாயிடம் பணம் வாங்குவதில் தகராறு: தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
கரூர் அருகே தாயிடம் பணம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ெதாழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அவரது சகோதரர் கைது செய்யப்பட்டார்.
பணத்தை மகனிடம் கொடுத்த தாய்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கொசூர் ஊராட்சி குண்டன் பூசாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன்கள் வெள்ளைச்சாமி (வயது 50). முருகேசன் (45). விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் தாய் கைலாசம் இளையமகன் முருகேசன் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
தற்சமயம் கைலாசம் வேப்பம்பழங்களை சேகரித்து விற்பனை செய்து அந்த பணத்தை முருகேசனிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அரிவாள் வெட்டு
இந்நிலையில் நேற்று முன்தினம் குண்டன்பூசாரியூரில் உள்ள முருகேசன் வீட்டில் கைலாசம் இருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளைச்சாமி, தனது தாய் கைலாசத்திடம் வேப்பம்பழம் விற்பனை செய்து வைத்து உள்ள பணத்தை கேட்டு உள்ளார். அப்போது அங்கிருந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி நல்லங்காள் ஆகிேயார் வெள்ளைச்சாமியிடம் தாய் கைலாசத்தை பராமரிப்பதும் இல்லை, உணவும் கொடுப்பதில்லை எப்படி பணம் கேட்கலாம் என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த முருகேசன், நல்லங்காள் ஆகியோர் சேர்ந்து வெள்ளைச்சாமியை தகாதவார்த்தையால் திட்டி, அரிவாளால் வெட்டினர். இதில் வெள்ளைச்சாமி காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
கைது
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் முருகேசன், நல்லங்காள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வெள்ளைச்சாமியின் மனைவி தாக்கியதால் காயம் அடைந்ததாக கூறி நல்லங்காள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.