சாலை பணியாளர்களுடன் தகராறு; பா.ஜ.க. நிர்வாகிகள் 2 பேர் கைது
சாலை பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக பா.ஜ.க. நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில்:
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சங்கரன்கோவிலில் வருகிற 6-ந் தேதி பாதயாத்திரை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து சங்கரன்கோவில்- புளியங்குடி செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை பாலத்தில் பா.ஜ.க.வினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை தலைமை அதிகாரிகள் சங்கரன்கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதையொட்டி நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட சுவர்களில் செய்யப்பட்டு இருந்த விளம்பரம் அழிக்கபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி புளியங்குடி சாலையில் உள்ள பாலத்தில் பா.ஜ.க.வின் சுவர் விளம்பரத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பணியாளர்கள் அழித்தனர். அப்போது அங்கு வந்திருந்த சங்கரன்கோவில் நகர பா.ஜ.க. இளைஞர் அணி பொறுப்பாளர் விக்னேஷ், நகர தலைவர் கணேசன் ஆகியோர் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இருதரப்பினரும் சங்கரன்கோவில் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.