திண்டுக்கல்லில் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள்


திண்டுக்கல்லில் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள்
x

திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே நடுரோட்டில் தனியார் பஸ்களை நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இருந்து திண்டுக்கல் புறநகர் பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் இன்று திண்டுக்கல்லை அடுத்த கோவிலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. அதேபோல் கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி மற்றொரு தனியார் பஸ்சும் வந்து கொண்டிருந்தது.

அப்போது யார் முதலில் பயணிகளை ஏற்றிச்செல்வது என்ற போட்டி அவர்களுக்குள் இருந்ததாக தெரிகிறது. இதனால் 2 பஸ் டிரைவர்களும் அதிவேகமாக பஸ்களை இயக்கி ஒருவரையொருவர் முந்திச்செல்ல முயன்றனர். அதில் 2 பஸ்களும் உரசுவது போல் சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் மரண பீதியுடனேயே அந்த பஸ்களில் பயணம் செய்தனர்.

இதற்கிடையே 2 பஸ்களும் திண்டுக்கல் பஸ் நிலையத்தை அடைந்தன. அதில் பயணம் செய்தவர்கள் டிரைவர்கள், கண்டக்டர்களை வசைபாடியபடியே இறங்கி சென்றனர். பின்னர் மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் பஸ் நிலையத்தை விட்டு 2 பஸ்களும் புறப்பட்டன. அப்போது யார் முதலில் செல்வது என்பது தொடர்பாக 2 பஸ்களின் டிரைவர்களும் பஸ் நிலையம் அருகே நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த பஸ்களில் இருந்தவர்களையும் இறக்கி விட்டனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் 2 பஸ்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச்சென்றனர். பின்னர் அந்த பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்களை எச்சரித்ததுடன், அபராதமும் விதித்தனர். திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே டிரைவர்கள், கண்டக்டர்கள் தகராறு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story