6 வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை பரிசீலிக்க வேண்டும் - திருவள்ளூர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு


6 வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை பரிசீலிக்க வேண்டும் - திருவள்ளூர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

பஞ்சாயத்துக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காத வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி கொடுக்கப்பட்ட மனுவை 4 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்கும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு கிராம பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர்களாக உள்ள முனுசாமி, பிரியங்கா, கோமதி, ராணி, யுவராஜ், மாரியம்மாள் ஆகிய 6 பேர் கடந்த சில காலமாக பஞ்சாயத்து பணிகள் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. இவர்கள் மாதந்தோறும் நடைபெறும் பஞ்சாயத்துக் கூட்டங்களில் பங்கேற்பதும் இல்லை.

பொதுமக்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால், இவர்கள் அந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வது இல்லை.

தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டப்பிரிவு 38 (ஜே) -வின் படி தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்துக் கொள்ளாத வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். இதன்படி, 6 கூட்டங்களுக்கு மேல் பங்கேற்காத இந்த 6 வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மாவட்ட கலெக்டருக்கு கடந்த மே 30-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.எஸ்.சுரேஷ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் பஞ்சாயத்து நிர்வாக பணிகள் முறையாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் விதத்தில், தன் கோரிக்கையை மாவட்ட கலெக்டர் பரிசீலிக்க வேண்டும் என்று கோருகிறார்.

எனவே, 6 வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து மனுதாரர் கடந்த மே 30-ந்தேதி அனுப்பிய கோரிக்கை மனுவை, மாவட்ட கலெக்டர் பரிசீலிக்க வேண்டும். அப்போது, அந்த 6 உறுப்பினர்களின் கருத்தையும் கேட்க வேண்டும். அதன்பின்னர், 4 வாரங்களுக்குள் தன்னுடைய இறுதி முடிவை எடுத்து தகுந்த உத்தரவை கலெக்டர் பிறப்பிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.


Next Story