பயணிகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் வினியோகம் : கர்நாடக அரசு பஸ்சுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
பயணிகளுக்கு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் விநியோகம் செய்த கர்நாடக மாநில அரசு பஸ்சுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
பயணிகளுக்கு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் விநியோகம் செய்த கர்நாடக மாநில அரசு பஸ்சுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை
சர்வதேச சுற்றுலாத்தலமாக திகழும் நீலகிரி, மற்றொருபுறம் உயிர் சூழல் மண்டலத்தின் முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர், 2 லிட்டர் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்கவும் தடை செய்யப்பட்டது.மேலும் நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. ஆனாலும் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடும் பெரிய அளவில் குறையவில்லை. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் கர்நாடக மாநில அரசு பஸ்சில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவில் இருப்பதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அபராதம்
இதன்பேரில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி தலைமையிலான வருவாய்த் துறையினர் ஊட்டி பஸ் நிலையம் சென்று கர்நாடக மாநில அரசு பஸ்சில் சோதனை செய்தனர். இதில் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவில் இருந்தது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் வழங்கியதாக கர்நாடக அரசு பஸ்சுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.