கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்


கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்
x

சங்கராபுரம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே கொசப்பாடி காலனி பகுதியில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

அப்போது குடிநீர் துர்நாற்றத்துடன் மாசடைந்த நிலையில் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளைசெயலாளர் சின்னதுரை தலைமையில், ஒன்றிய செயலாளர் சிவாஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் முரளி உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள கொசப்பாடி- கச்சிராபாளையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடைந்த குழாயை சரிசெய்யும் பணி நடைபெற்றது.

குடிநீருடன் கழிவுநீர் கலப்பு

இருப்பினும் குழாய் உடைப்பை முழுமையாக சரிசெய்யாமல் அதன் மூலம் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றியுள்ளனர். இதனால் உடைந்த குழாய் வழியாக மண், கழிவுநீர் கலந்துள்ளதால் எங்களுக்கு மாசடைந்த நிலையில் குடிநீர் வந்துள்ளது. குழாய் உடைப்பு முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளதா என்பதை ஊராட்சி நிர்வாகம் சரிபார்க்காமல், மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றியுள்ளது.

எனவே குடிநீர் வினியோகத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அயூப்கான், ஒன்றிய பொறியாளர் ராஜகோபால், பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடைந்த குடிநீர் குழாயை முழுமையாக சரிசெய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்படி பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story