கோவை நகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்


கோவை நகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை நகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்

கோயம்புத்தூர்

கோவை

பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைய உள்ளதால், அடுத்த மாதம் முதல் கோவைக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

ரூ.110 கோடி திட்டங்கள்

கோவை வ.உ.சி மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேற்று அரசு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ரூ.11.8 கோடி மதிப்பீட்டில் 27 முடிவற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தும், ரூ.67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.32.12 கோடி மதிப்பீட்டில் 703 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மொத்தம் 110.68 கோடி மதிப்பில் திட்டங்களை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது கூறியதாவது:-

குடிநீருக்கு ரூ.25 ஆயிரம் கோடி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மட்டுமல்ல குடிநீர் வழங்கலிலும் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. கோவைக்கு கூடுதல் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னைக்கு தினசரி 1000 எம்.எல்.டி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இன்னும் ஓராண்டுக்குள் சென்னைக்கு 2 ஆயிரம் எம்.எல்.டி. குடிநீர் வழங்கும் வகையில் திட்டம் விரிவு படுத்தப்படும்.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே குடிநீர் வினியோகத்திற்கு செலவிடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் இரண்டே ஆண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் குடிநீர் வினியோகத்துக்கு கொடுத்து இருக்கிறோம். 100 சதவீத மக்களில் 60 சதவீத மக்கள் நகர பகுதிகளில் வசிக்கின்றனர்.

இவ்வாறுஅவர் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்

கோவை மாநகருக்கு தினசரி 298 எம்.எல்.டி குடிநீர் தேவை. ஆனால் இப்போது 214 எம்.எல்.டிதான் கிடைக்கின்றது. பில்லூர் 3-வது திட்டத்தில் இன்னும் ஒன்றரை கிலோ மீட்டர் மட்டுமே பைப்லைன் பாக்கி இருக்கிறது. விரைவில் இந்த பணிகள் நிறைவடைந்து விடும். அதன் பின்னர் நகருக்கு கூடுதலாக 118 எம்.எல்.டி. குடிநீர் கிடைக்கும். அடுத்த மாதம் முதல் கூடுதல் தண்ணீர் கிடைக்கும் என்பதால் கோவை மாநகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படும். சிறுவாணி, ஆழியார் பிரச்சினைகள் குறித்து கேரள அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.

கோவை நகரில் சாலைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 680 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தபணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

100 வருடமாக பேசுகிறோம்

உதயநிதி ஸ்டாலின் குறித்து சாமியார்கள் எதையாவது பேசுவார்கள். வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். நாங்கள் திராவிட இயக்க கொள்கையை நூறு வருடமாக பேசிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு புதிதாகவா பேசுகிறோம். பாரத் என வந்தாலும் சரி, இந்தியா என்று வந்தாலும் சரி ஏற்றுக் கொள்வோம். ஆனால் நாங்கள் ஒன்றிய அரசு என்று தான் சொல்வோம் என டி.ஆர்.பாலு சொல்லி இருக்கின்றார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடக்காத விஷயம். தேர்தல் ஆணையமே இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.1.20 கோடியில் பூ மார்க்கெட் பகுதியில் புனரமைக்கப்பட்ட 172 கடைகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

விழாவில் கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றி செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story