ரேஷன் கடையில் தரமற்ற துவரம் பருப்பு வினியோகம்


ரேஷன் கடையில் தரமற்ற துவரம் பருப்பு வினியோகம்
x
தினத்தந்தி 2 March 2023 6:45 PM GMT (Updated: 2 March 2023 6:46 PM GMT)

கடமலைக்குண்டு அருகே ரேஷன் கடையில் தரமற்ற துவரம் பருப்பு வினியோகம் செய்யப்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் துவரம் பருப்பை கடை முன்பு கொட்டி சென்றனர்.

தேனி

தரமற்ற பருப்பு வினியோகம்

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள சிங்கராஜபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் காலை 8 மணி அளவில் கடை திறக்கப்பட்டு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. அதில் துவரம் பருப்பில் வண்டுகள் ஊர்ந்து செல்வதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரேஷன் கடை பணியாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ரேஷன் கடை பணியாளர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் தரமற்ற துவரம் பருப்பை கடைக்கு முன் கொட்டி விட்டு சென்றனர்.

எடை அளவு குறைவு

ஏற்கனவே இந்த ரேஷன் கடையில் கடந்த சில மாதங்களாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் எடை அளவு குறைவாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தரமற்ற துவரம் பருப்பு வினியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே சிங்கராஜபுரம் ரேஷன் கடையில் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான பொருட்களை சரியான எடையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story