மாவட்ட தடகள போட்டி
மாவட்ட தடகள போட்டி நடைபெற்றது.
அம்பை:
விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இடைகால் மெரிட் கல்வி நிறுவனங்கள் சார்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான 8-வது தடகள போட்டிகள் மெரிட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. சுமார் 35 பள்ளிகளில் இருந்து 1,200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மெரிட் கல்வி குழும தாளாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றினார். இயக்குனர் ராஜேஸ்வரி ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். தாமிரபரணி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் அருள்ராஜ் வரவேற்றார்.
14, 17, 19 வயது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு போட்டிகள் நடைபெற்று தனிநபர் சாம்பியன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் கேடயத்தை ஆண்கள் பிரிவில் சிங்கை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியும், பெண்கள் பிரிவில் அமளி மகளிர் மேல்நிலைப்பள்ளியும் பெற்றனர். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள், கல்லூரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிகுமார், கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.