வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் நேற்று நடந்தது.
சென்னை,
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி ஆலோசனை நடத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தி.மு.க. தரப்பில் மருதுகணேஷ் உள்பட நிர்வாகிகள், அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் பாலகங்கா உள்ளிட்ட நிர்வாகிகள், பா.ஜ.க. சார்பில் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள், காங்கிரஸ் சார்பில் துணைத் தலைவர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் என அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும் இதில், கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி துணை ஆணையாளருமான விஷூ மகாஜன், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஜி.குலாம் ஜிலானி பாபா உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
ஆலோசனை
கூட்டத்தில் முக்கியமாக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை தாமாக முன்வந்து இணைப்பதற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அந்த விஷயம் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் தங்களுடைய கருத்துகள், விவாதங்களை முன்வைத்தனர். அதற்கு ககன்தீப் சிங் பேடி விளக்கம் அளித்தார்.
அப்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் சிலர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது மிக கவனமுடன் அதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் வைத்தனர்.
அதேபோல வாக்காளர் அட்டையில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023, இந்த திருத்த காலத்தில் இருந்து 17 வயதுக்கு மேற்பட்டவர்களும் வாக்காளராக பெயர் சேர்க்க முன்னதாகவே மனு அளிப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது. மேலும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுதொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.