பள்ளிப்பட்டு அருகே ரூ.5 கோடியில் கட்டப்பட்ட கோர்ட்டு கட்டிடம்- மின் இணைப்பு கிடைப்பது எப்போது?


பள்ளிப்பட்டு அருகே ரூ.5 கோடியில் கட்டப்பட்ட கோர்ட்டு கட்டிடம்- மின் இணைப்பு கிடைப்பது எப்போது?
x
தினத்தந்தி 8 Oct 2023 8:51 AM GMT (Updated: 8 Oct 2023 10:38 AM GMT)

பள்ளிப்பட்டு அருகே ரூ.5 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற புதிய கட்டிடம் மின் இணைப்பை எதிர்நோக்கி காத்து நிற்கிறது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு- சோளிங்கர் சாலையில் வார சந்தை மைதானம் எதிரே கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தனியார் வாடகை கட்டிடத்தில் திறக்கப்பட்டது. அன்று முதல் இந்த நீதிமன்றம் இந்த தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தனியார் கட்டிடம் என்பதால் இந்த கட்டிடத்தில் காற்று வசதி இல்லாமல், வெளிச்சம் இல்லாமல் வக்கீல்கள் அமருவதற்கு போதிய நாற்காலிகள் இல்லாமல், வழக்குகளுக்காக வரும் பொதுமக்கள் அமர இடம் இல்லாமல் நின்று கொண்டே இருக்கும் சூழ்நிலை இருந்து வந்தது.

இதனால் இங்குள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்காக பள்ளிப்பட்டு நகரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை புறம்போக்கு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ரூ. 5 கோடியில் நீதிமன்ற கட்டிடம் கட்ட அரசு அனுமதி அளித்தது.

அந்த இடத்தில் கட்டிட பணிகள் நடைபெற்று தற்போது புதிய கோர்ட்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. ஆனால் இந்த கட்டிடத்திற்கு உரிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தும் இது நாள் வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே அரசு உயர் அதிகாரிகள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற புதிய கட்டிடத்திற்கு உடனடியாக மின் இணைப்பை பெற்று தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story