வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் ஆய்வு செய்தார். அப்போது, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திட்டப்பணிகள் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், முதலில் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, குறித்த நேரத்தில் சத்தான உணவுகளை சுகாதாரமான முறையில் சமைத்து வழங்கி வரும் சமையலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதையடுத்து சேலம் மாநகராட்சி அய்யந்திருமாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.2½ கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மையத்தையும், அம்மாப்பேட்டை அடுத்த அல்லிக்குட்டை ஏரியில் ரூ.10 கோடியில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் இருப்பு போதிய அளவில் உள்ளதா? என்பது குறித்து அங்கிருந்த மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
போடிநாயக்கன்பட்டி ஏரி
மேலும், சூரமங்கலம் மண்டலம் போடிநாயக்கன்பட்டி ஏரியில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.