வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

அகனி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

அகனி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளிகளில் ஆய்வு

சீர்காழி ஒன்றியம் அகனி ஊராட்சி தென்னங்குடிகுளம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர், படித்துறை உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பணியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்குனருமான அமுதவல்லி, கலெக்டர் லலிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அகனி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நேரில் சென்று குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

வளர்ச்சி திட்டப் பணிகள்

இதையடுத்து பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவறை கட்டிடத்தை பார்வையிட்டார். பள்ளியில் சேதம் அடைந்த நிலையில் உள்ள டேபிள், நாற்காலி உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக ஊராட்சி சார்பில் வாங்க ஊராட்சி மன்ற தலைவர் மதியழகனை கேட்டுக்கொண்டார்.

இதை தொடர்ந்து ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார்.

ஆய்வின் போது உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர்கள் இளங்கோவன், சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

எருக்கூர்

இதேபோல் கொள்ளிடம் அருகே எருக்கூர் ஊராட்சியில் ரேஷன் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ரேஷன் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். பின்னர் கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டார். ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளையும், எடமணல் ஊராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் சபிதா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் மணிகண்டன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story