வால்பாறையில் வளர்ச்சி பணிகளை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு-விரைவில் முடிக்க அறிவுரை
வால்பாறையில் வளர்ச்சி பணிகளை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு செய்தார். அந்த பணிகளை வரைவில் முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
வால்பாறை
வால்பாறையில் வளர்ச்சி பணிகளை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு செய்தார். அந்த பணிகளை வரைவில் முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
ஆய்வு
வால்பாறை பகுதியில் அரசு தொழில் பயிற்சி மையம் அமைப்பதற்கும், அரசின் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கும், வருவாய் துறைக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து பாதுகாப்பதற்கும், தேயிலை தோட்டங்களை தவிர பள்ளிக்கூடம், கோவில், ஆஸ்பத்திரி, விளையாட்டு மைதானம் என்று எஸ்டேட் நிறுவாகங்களால் ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களையும் நேரடி ஆய்வு செய்வதற்காக கோவை மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் நேற்று வால்பாறைக்கு வந்திருந்தார்.
வால்பாறை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்லூரி மாணவிகள் விடுதியை ஆய்வு செய்து விடுதியில் தேவைப்படும் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் கட்டுவதற்கான இடங்களையும் ஆய்வு செய்தார். கூட்டுறவு காலனி பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை பாதுகாப்பு செய்வதற்கும் ஆய்வு மேற்கொண்டார்.
அறிக்கை அனுப்ப உத்தரவு
தொடர்ந்து வால்பாறை அருகில் செயல்படாத நிலையில் இருந்து வரும் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு தொழிற்பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டால் அந்த இடத்திற்கு மாணவ மாணவிகள் வந்து செல்வதற்கு வசதிகள் இருக்குமா, படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்குமா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்தார். சிங்கோனா பகுதியில் செயல்படாமல் இருந்து வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தையும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இதேபோல் வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் உள்ள அமுதம் ரேஷன் கடையை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் ரேஷன் கடையில் உள்ள இருப்பு விபரங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வால்பாறை தாசில்தார் ஜோதிபாசு, தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், வட்டார நில அளவை ஆய்வாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.