நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கைது


நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கைது
x

திட்டக்குடியில் ரூ.8 கோடிக்கு பேரம் பேசி நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

திட்டக்குடி,

திட்டக்குடி பகுதியில் நடராஜர் சிலையை விற்க பேரம் பேசுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஆவினங்குடி சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு மற்றும் போலீசார் திட்டக்குடி பகுதியில் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் 2 அடி உயரமுள்ள நடராஜர் சிலையை ரூ.8 கோடிக்கு விற்க சிலர் பேரம் பேசியது தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து வேப்பூர் அருகே உள்ள காஞ்சிராங்குளத்தை சேர்ந்த தங்கராசு மகன் பெரியசாமி(வயது 42), ஆவினங்குடியை சேர்ந்த நல்லமுத்து மகன் ராமர்(33), வேப்பூர் அடுத்த பாசாரை சேர்ந்த கருப்பையா மகன் ராமச்சந்திரன்(33), மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த ராஜசூரியன்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ராமர், தனது நண்பர் சரவணனுடன் சேர்ந்து தொழுதூர் அதர்நத்தத்தை சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளரான வேல்முருகன் என்பவரிடம் இருந்து சிலையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

வன்னியர் சங்க செயலாளர் சிக்கினார்

இந்த நிலையில் நேற்று மதியம் வெளியூருக்கு தப்பி செல்வதற்காக திட்டக்குடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வேல்முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நடராஜர் சிலையை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் ஒருவரிடம் வாங்கியதாக கூறியுள்ளார். ஆனால் சிலை கடத்தப்பட்டதா? அல்லது கடையில் இருந்து வாங்கப்பட்டதா? என்று தெரியவில்லை. தொடர்ந்து வேல்முருகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story