தீபாவளி பண்டிகை: பொருட்கள் வாங்க கரூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்


தீபாவளி பண்டிகை: பொருட்கள் வாங்க கரூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்
x

தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கரூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அப்பகுதியில் கமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கரூர்

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து, இனிப்பு பலகாரங்கள் செய்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கரூர் ஜவகர்பஜாரில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கான ஜவுளி மற்றும் இனிப்பு பலகாரங்கள், பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் நேற்று கடைவீதிகளில் குவிந்தனர்.

மக்கள் அலைமோதல்

நேற்று காலை முதல் பொதுமக்கள் கடைவீதிகளில் குவிய ஆரம்பித்தனர். இதனால் ஜவகர்பஜார் பகுதியில் எங்கு திரும்பினாரும் மக்கள் தலையாக தென்பட்டது. ஜவுளி கடைகள், ஸ்வீட்ஸ் கடைகள், பலகார கடைகள், பட்டாசு கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.மேலும் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தரைக்கடை பகுதிகள், கோவை சாலை, பிரம்மதீர்த்த சாலை பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்தனர். கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போக்குவரத்து நெரிசல்

கரூர் கடைவீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் கரூரில் மாநகர பகுதிகளில் நேற்று வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மனோகரா கார்னர், கோவை சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, திருச்சி ரோடு உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்தனர்.


Next Story