தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள்..!
தமிழகம் முழுவதும் 95 மருத்துவமனைகளில் தீபாவளிக்காக சிறப்பு தீக்காய வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காய சிறப்பு வார்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ,
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பதும், தீ விபத்து இல்லாத தீபாவளி என்கின்ற வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும். எதிர்பாராத தீ விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கப்பதற்காக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் ஆகிய 95 மருத்துவமனைகளில் தீபாவளிக்காக சிறப்பு தீக்காய வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தேவையான மருந்துகள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.