தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 3 பேர் கைது
பழனி அருகே மண் கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயன்ற வழக்கில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மண் கடத்தல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி பொன்னிமலை சித்தன் கோவில் பகுதியில் இருந்து லாரியில் மண் கடத்தி செல்வதாக, கடந்த 13-ந்தேதி கிராம நிர்வாக அதிகாரி கருப்புசாமிக்கு புகார் வந்தது.
அதன்பேரில் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர், உதவியாளர் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மண் லாரியை மடக்கி ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில், சட்டவிரோதமாக மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து லாரியை ஆயக்குடி போலீஸ்நிலையத்துக்கு கொண்டு செல்லும்படி டிரைவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். லாரி முன்னால் செல்ல வருவாய்த்துறையினர் பின்னால் வந்தனர்.
அப்போது லாரி டிரைவர் வருவாய்த்துறையினர் மீது மோதுவதுபோல் இயக்கி மண்ணை கொட்டினார். இதேபோல் காரில் வந்த சிலரும், அதிகாரிகள் மீது காரை மோதுவது போல் இயக்கினர். பின்னர் லாரி மற்றும் காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
தி.மு.க. நிர்வாகிகள்
இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி கருப்புசாமி ஆயக்குடி போலீசில் புகார் அளித்தார்.
அதில், லாரி மற்றும் காரை ஏற்றி தங்களை கொல்ல முயன்ற பாலசமுத்திரத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சக்திவேல், தி.மு.க. நெசவாளர் அணி நிர்வாகி பாஸ்கரன், லாரி உரிமையாளர், டிரைவர் உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் அவர்கள் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 பேர் கைது
இதற்கிடையே அதிகாரிகளை கொல்ல முயன்றவர்களை கைது செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகளை கொல்ல முயன்றவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்நிலையில் சக்திவேல் (வயது 59), பாஸ்கரன் (45), லாரி உரிமையாளர் காளிமுத்து (35) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய லாரி டிரைவர் மற்றும் 2 பேரை தேடி வருகின்றனர்.