தி.மு.க. அரசு போலீஸ்துறைக்கு நண்பன்: போலீசார் நேரம் கிடைக்கும்போது விளையாட வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க. அரசு போலீஸ்துறைக்கு நண்பன். போலீசார் நேரம் கிடைக்கும்போது விளையாட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
போலீசாருக்கு விளையாட்டு மைதானம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது, போலீசாரின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக 25 வகையான விளையாட்டு பிரிவுகளுக்கு ரூ.1 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படும். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடை பந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்ட கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து அங்கு போலீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.
பின்னர், போலீஸ்துறைக்கு ரூ.1 கோடியே 54 லட்சம் செலவில் வாங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போலீசாருக்கு தி.மு.க. அரசு நண்பன்
விழாவில் போலீசாருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
போலீசார் மக்களை காப்பவர்கள். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள். அவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும், உள்ளத்தில் புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்பதுதான் நமது முதல்-அமைச்சரின் எண்ணம் ஆகும். அதற்காக தான் வாரம் ஒரு நாள் போலீசார் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.
'காவல்துறை உங்கள் நண்பன்' என்று நீங்கள் (போலீசார்) பொதுமக்களிடம் கூறுகிறீர்கள். அதேபோன்று இந்த அரசு காவல்துறைக்கு என்றென்றும் நண்பனாக இருக்கும். போலீசாரின் பணிச்சுமை கடுமையானது. சாலையில் தண்ணீர் தேங்கினாலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும் முதல் ஆளாக களத்தில் நிற்பது போலீசார்தான்.
தமிழ்நாட்டை அமைதி பூங்கா என்று பெருமையாக சொல்கிறோம். அதற்கு முழு காரணமான போலீசார் நன்றாக இருந்தால்தான் மக்கள் நன்றாக இருக்க முடியும். தமிழ்நாடும் நன்றாக இருக்க முடியும். போலீசார் விளையாட்டில் ஈடுபடுவது அவர்களுடைய மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும். எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் போலீசார் விளையாட வேண்டும் என்று விளையாட்டு துறை அமைச்சரான எனது விருப்பம் ஆகும். போலீசார் விளையாட்டு போட்டிகளில் சாதிப்பதற்கு என்ன வேண்டும் என்றாலும், விளையாட்டு மேம்பாட்டு துறையிடம் கேளுங்கள். அதை செய்து தருவதற்கு எங்கள் துறை எப்போதும் தயாராக இருக்கும்.
கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டை சேர்ந்த போலீஸ்காரர் நாகநாதன் சென்றார், வென்றார். 2024-ம் ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நாம் பல நாகநாதன்களை அனுப்பி வைக்க வேண்டும். பதக்கங்களை வெல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிலம்பம் சுற்றி உறுதிமொழி ஏற்பு
இந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிலம்ப கலைஞர்கள், சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகள் 1,600 பேர் ஒரே நேரத்தில் சிலம்பத்தை சுற்றி காட்டி போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதனை கின்னஸ் சாதனை யூனியன் அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியது.
விழாவில் கூடுதல் கமிஷனர் லோகநாதன் வரவேற்று பேசினார். இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி நன்றி கூறினார். கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்பட போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் பங்கேற்றனர்.