தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

புதுக்கோட்டையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராயம் குடித்ததில் பலி சம்பவம் உள்பட தி.மு.க. அரசை கண்டித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. கள்ளச்சாராயம் ஆறாக பெருகி ஓடி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவத்துறை அனைத்திலும் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது தி.மு.க. அரசில் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் தற்போது தி.மு.க. ஆட்சியில் பறிபோனது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் டாஸ்மாக்கில் ஒரு மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 மூலம் ரூ.10 கோடியும், அனுமதியற்ற பார்களில் மதுவிற்பனை மூலம் ஒரு நாளைக்கு 30 கோடி ரூபாய் செல்கிறது.

இதனை கரூர் கம்பெனிக்காரர்களுக்கு கொடுக்க சொல்லி டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகள் வாய்மொழியாக சொன்னதாக செய்திகள் வருகின்றன. இதற்கு யார் பொறுப்பேற்பது. ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் நான் பல்வேறு வழக்குகளை சந்தித்துள்ளேன். எந்த வழக்குகளையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது யார்?. கடந்த 2011-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது காங்கிரஸ் அரசு. அப்போது கூட்டணியில் இருந்தது தி.மு.க. அரசு. ஆனால் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது தி.மு.க. என கூறுகின்றனர். உச்சநீதிமன்றத்தில் அபிடவட் செய்து, அ.தி.மு.க. சார்பில் நாங்கள் வழக்கு தொடுத்து எங்களின் வழக்கறிஞர்கள் மூலம் வாதாடி வெற்றியை பெற்றுக்கொடுத்தது அ.தி.மு.க. அரசு. ஜல்லிக்கட்டுக்கு டெபாசிட் விதித்தது தி.மு.க. அரசு, டெபாசிட்டை எடுத்தது ஜெயலலிதா. ஆனால் ஜல்லிக்கட்டில் தி.மு.க. போராடி வெற்றி பெற்றதாக புதுக்கோட்டையில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாறும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கார்த்திக் தொண்டைமான், நார்த்தாமலை ஆறுமுகம், நகர செயலாளர்கள் பாஸ்கர், சேட் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.


Next Story