அரக்கோணம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
அரக்கோணம் நகராட்சி கூட்டத்தில், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி கூட்டம்
அரக்கோணம் நகரமன்ற கூட்டம், நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் லதா வரவேற்றார்.
கூட்டத்தில் 23-வது வார்டில் ரேஷன் கடை கட்டுவதற்காக சி.வி.சண்முகம் எம்.பி. நிதி ஒதுக்கீடு செய்து பரிந்துரை குறித்த தீர்மானம் வாசித்தபோது, கவுன்சிலர் நரசிம்மன் (அ.தி.மு.க.) எனது வார்டு பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடைக்கு செல்வதால் வார்டு வளர்ச்சிக்காக வைத்த கோரிக்கையின் படி மாநிலங்களைவை உறுப்பினர் சி.வி.சண்முகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதேபோன்று அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி கட்சி பாகுபாடின்றி நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால், தி.மு.க. எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, நகர மன்ற தலைவர் நகராட்சி திட்ட வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு கேட்க வேண்டும் என்றார்.
வாக்கு வாதம்
இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜெகத்ரட்சகன் எம்.பி. பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதனிடையே கவுன்சிலர் ஜெர்ரி (அ.தி.மு.க.) பேசும் போது அரக்கோணம் நகராட்சி முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தான் சாலைகள் போடப்பட்டது என்றார். இதனால் மீண்டும் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர்.
பின்னர், நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி பேசும் போது அரக்கோணம் நகரின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடுக்கான விவர அறிக்கை ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு அனுப்பியுள்ளோம் என்றார்.