தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாக்குவாதம்
திருவண்ணாமலை நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகரமன்ற கூட்டம்
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற கூட்ட அரங்கில் நகரமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது. நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் ராஜாங்கம் பொறியாளர் நீலேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் நகரமன்ற வார்டு உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பேசுகையில், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுற்றியுள்ள பகுதியில் தார்சாலை, கல்வெட்டு மற்றும் கால்வாய் சீர் செய்து தர வேண்டும்.
குப்பை தொட்டிகள் அமைத்து கொடுக்க வேண்டும். அய்யங்குளத்தை சீரமைத்து சிறுவர் பூங்கா மற்றும் போட்டிங் வசதி செய்து தர வேண்டும். தேரடி தெருவில் உள்ள பூ மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டை விரைவில் மாற்றி தர வேண்டும் என்றனர்.
தொடர்ந்து அவர்கள் பேசுகையில், நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளிலும் பல பகுதிகளில் பாதாள சாக்கடை, கழிவுநீர் கால்வாய், சாலை, குடிநீர் மின்மோட்டார்கள் பழுதடைந்து உள்ளதாக கூறினர்.
வாக்குவாதம்
அப்போது தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து மட்டும் பேசுங்கள் மற்ற வார்டுகள் குறித்து பேச வேண்டாம் என்று தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் கூறினர்.
இதனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே குறுக்கிட்ட நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் எந்த குறைகள் இருந்தாலும் நேரடியாக என்னிடம் தெரிவிக்கவும். மற்ற வார்டுகளை பற்றி பேச வேண்டாம் என்றார்.
55 தீர்மானங்கள்
அதைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர் தங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதித்தனர்.
பின்னர் கூட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சி உள்ள பகுதிகளில் குடி நீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.